Wednesday, April 8, 2020

நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?

குறிஞ்சியையும் முல்லையையும் பின் தள்ளியவாறு அந்த ரயில் வேகமாக அதன் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்தது. சைட் லோயர் பேர்த்தில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

"நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?", என்று ஒரு குரல்.

கவனம் கலைய, குரல் வந்த திசை நோக்கி பார்த்தேன். சுமார் ஏறக்குறைய என்னுடைய வயது தான் இருக்கும். அருகில் அவன் மனைவி போலும். புதிதாக கல்யாணம் ஆகி இருக்க வேண்டும். அந்த பெண்ணின் கழுத்தில் பளிச்சென்று மஞ்சள் கயிறு.

"ஆமாம்", என்று சொல்லி ஏன் என்பது போல் புருவத்தை உயர்த்தினேன்.

"நமக்கு சைட் அப்பர். இன்னொரு பேர்த் சைட் லோயர் தான், ஆனால் ரெண்டு கோச் தள்ளி குடுத்துருகாங்க. நீங்க தப்பா எடுத்துக்கலனா  உங்க சீட்ட மாத்திக்கறீங்களா?

ரெண்டுமே சைட் லோயர் தானே, என்ன பெரிய வித்தியாஸம்? மலையும் வயலும் ஒரு ரெண்டு நொடி தள்ளி தெரியும். அவ்வளவு தான்."சரி" என்று ஒத்துக்கொண்டேன். 

எனது பையை எடுத்து கொண்டு புதிய இருக்கையை அடைந்தேன். மழைக்காலம் அப்போது தான் முடிந்திருந்தது. மலையும் வயலும் எல்லா பக்கமும் பச்சை பசேல் என்று மிகவும் ரம்மியமாக இருந்தது. ஒருபுறம் இயர்க்கையின் அழகை ரசித்தபடியே அருகில் நோட்டம் விட்டேன். 

சற்று வயசானவர். கூட அவரது மகளாக இருக்கணும். இருவரும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். "கவலை படாதீங்க அப்பா. பக்கத்து கோச்ல தான் இருக்கேன். அடிக்கடி வந்து பாத்துட்டு போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.", மகளின் பேச்சை கேட்டு சற்று யோசித்தவாறே என்னை பார்த்தார்,

"நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?"

--------------------
Click here to read this story in English.

No comments:

Post a Comment

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...