Friday, April 24, 2020

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன்.

"உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கேள்வி.

சமீபத்தில் தான் லாக்டௌன் சமயத்தை உருப்படியா கழிப்பதற்கு மழலையும் மனையாளும் ஒரு புது மொழியை ஆப் மூலமாக கற்றுக்கொள்வதாக சொன்னாள். 

மனைவியை அஸத்த இது ஒரு நல்ல தருணம் என்று யோசித்து உடனே கூகலை திறந்து வைத்து "ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்" என்றேன்.

"ஐயைய, அப்பாக்கு "க்நிஃபெ"னா என்னன்னு தெரியலைடா" என்று சொல்லி மழலையும் மனையாளும் சிரித்தார்கள்.

அப்படி என்னவா இருக்கும்னு யோசிச்சிண்டு இருக்கும் போது, மனையாள் மழலை படித்த ஸ்பெல்லின்கை ரசித்தபடியே சொன்னாள்:

KNIFE

Thursday, April 9, 2020

என்னை கல்யாணம் பண்ணிக்கரியா?

மாலை நேரம். கோவிலில் ரொம்ப கூட்டம் இல்லை. குளத்து படித்துறையில் அமர்ந்தபடியே அவளோடு பேசிக்கொண்டு இருந்தான் வருண்.  சூரியன் பைபை சொல்ல ரெடியாக இருந்தது. இருவர் மனதில் இருந்த காதல் சூரியனுக்கு புரிந்திருக்க வேண்டும். வானத்தில் வண்ண கோலம். சற்று நேரம் இருந்து பார்த்துவிட்டு போவோம் என்பது போல் மேகத்தின் ஊடே ஒளிந்து வேடிக்கை பார்த்தது.

வருண் அவன் மனதில் இருந்த காதலை இன்னும் சொல்லவில்லை. சொல்ல தெரியவில்லை. ஒருவேளை அவன் காதலை சொல்லிவிட்டால் என்ன பதில் சொல்வது என்று ஸ்வாதீக்கு புரியவில்லை. குழப்பமான நிசப்தம் அங்கு நிலவியது.

எத்தனையோ காதல் வசனங்கள் மனப்பாடம் ஆன வருணுக்கு சற்றென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. இந்த தனிமை மீண்டும் கிடைக்குமா? சந்தேகம் தான்.

"சரி, வீட்டுக்கு கிளம்பறேன். ரொம்ப நேரம் ஆச்சு", ஸ்வாதீ தயக்கத்துடன் புறப்பட தயார் ஆனாள். 

"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன", பாடல் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. 

அவளை உற்று பார்த்தான். இவள் தான் என்னுடையவள் என்பதில் சந்தேகமே இல்லை அவனுக்கு. ஆனால் அவளுக்கு நான் அப்படியா? தெரியவில்லை. எப்படி கேட்பது என்றும் புரியவில்லை.

அரை முட்டி போட்டு ஒரு வைர மோதிரம் வைத்து காதலை சொல்ல ஆசை தான்.  மாறாக, அவன் வாயிலிருந்து வந்தது என்னவோ, "என்னை கல்யாணம் பண்ணிக்கரியா?" என்ற கேள்வி மட்டும் தான்.

இதை கேட்டதும் ஸ்வாதீக்கு அவன் கையில் தாலி வெச்சிறுக்கானோ என்று பயம். இருவர் முகத்திலும் ஒரு அசட்டு சிரிப்பு. 

சூரியன் தலையில் அடித்து கொண்டு மறைந்தது.

Wednesday, April 8, 2020

நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?

குறிஞ்சியையும் முல்லையையும் பின் தள்ளியவாறு அந்த ரயில் வேகமாக அதன் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்தது. சைட் லோயர் பேர்த்தில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

"நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?", என்று ஒரு குரல்.

கவனம் கலைய, குரல் வந்த திசை நோக்கி பார்த்தேன். சுமார் ஏறக்குறைய என்னுடைய வயது தான் இருக்கும். அருகில் அவன் மனைவி போலும். புதிதாக கல்யாணம் ஆகி இருக்க வேண்டும். அந்த பெண்ணின் கழுத்தில் பளிச்சென்று மஞ்சள் கயிறு.

"ஆமாம்", என்று சொல்லி ஏன் என்பது போல் புருவத்தை உயர்த்தினேன்.

"நமக்கு சைட் அப்பர். இன்னொரு பேர்த் சைட் லோயர் தான், ஆனால் ரெண்டு கோச் தள்ளி குடுத்துருகாங்க. நீங்க தப்பா எடுத்துக்கலனா  உங்க சீட்ட மாத்திக்கறீங்களா?

ரெண்டுமே சைட் லோயர் தானே, என்ன பெரிய வித்தியாஸம்? மலையும் வயலும் ஒரு ரெண்டு நொடி தள்ளி தெரியும். அவ்வளவு தான்."சரி" என்று ஒத்துக்கொண்டேன். 

எனது பையை எடுத்து கொண்டு புதிய இருக்கையை அடைந்தேன். மழைக்காலம் அப்போது தான் முடிந்திருந்தது. மலையும் வயலும் எல்லா பக்கமும் பச்சை பசேல் என்று மிகவும் ரம்மியமாக இருந்தது. ஒருபுறம் இயர்க்கையின் அழகை ரசித்தபடியே அருகில் நோட்டம் விட்டேன். 

சற்று வயசானவர். கூட அவரது மகளாக இருக்கணும். இருவரும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். "கவலை படாதீங்க அப்பா. பக்கத்து கோச்ல தான் இருக்கேன். அடிக்கடி வந்து பாத்துட்டு போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.", மகளின் பேச்சை கேட்டு சற்று யோசித்தவாறே என்னை பார்த்தார்,

"நீங்க தனியா வந்துருக்கீங்களா சார்?"

--------------------
Click here to read this story in English.

Saturday, November 16, 2019

(ரயிலின்) உள்ளே வெளியே

"வண்டிய சீக்கரம் எடுத்துடுவான். கீழே இறங்காதீங்க." ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் சிறிது நேரம் இருக்கும்போதே தாமரை கணவனை எச்சரித்தாள்.

கார்த்திக்கு கொள்ளை பசி. ஏதாவது சாப்பிடனும். இறங்காமல் எப்படி? "அதெல்லாம் ஒன்னும் ஆகாது. கவலை படாதே. நா டக்குன்னு போய் ஏதாவது வாங்கிண்டு வந்துடுவேன். நீ உள்ளேயே இரு", என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தான்.

ஒரு மலை பாம்பு மெதுவாக குகைக்குள் புகுவது போல அந்த ட்ரெயின் நடைமேடையில் நுழைந்தது. வண்டி நிற்பதற்குள் கார்த்திக்கின் தேர்ந்த கண்கள் அந்த மொத்த ஸ்டேஷன்ல இருந்த ஒரே சாப்பாடு ஸ்டாலை கண்டு பிடித்துவிட்டது. சடாரென இறங்கி சாப்பிடுவதற்கு என்ன இருக்குனு பாக்க வேகமா ஓடினான்.

தாமரைக்கு இருப்பு கொள்ளலை. ட்ரெயின்ல போறதுனாலே ஒரு பயம் அவளுக்கு. திடீர்னு எடுத்துட்டான்னா, பேரு தெரியாத ஊர்ல மாட்டிண்டு என்ன செய்யறதுனு கவலை. ஸ்டேஷன் மாஸ்டர் மணி அடித்து பச்சை கோடி காட்டுவதற்கு தயாராக இருந்தார். கார்த்திக் எங்கேனு ஒன்னும் தெரியல. என்ஜினை விட அவளது இதய துடிப்பு பெருசா இருந்துது.

கதவை நோக்கி நகர்ந்தாள். கண்ணுக்கு எட்டின தூரம் வரை கார்த்திக்கை காணவில்லை. ரயில் கிளம்பியே  விட்டது. நடைமேடை விட்டு வேகம் பிடிப்பதற்குள் சட்டென்று கீழே குதித்தாள். ரயில் மெல்ல வேகம் பிடித்தது.

கோபமாக அந்த சாப்பாடு ஸ்டாலை நோக்கி விரைந்தாள். "தாமரை!" எங்கிருந்தோ குரல் கேட்டது. ஐந்து கம்பார்ட்மெண்டுகள் தாண்டி கார்த்திக் விரைந்து செல்லும் அந்த ரயிலின் உள்ளே இருந்தான், சூடா வாங்கின சாப்பாடு பொட்டலத்தோடு.

Monday, November 4, 2019

'வாழ நினைத்தால் வாழலாம்' கதை விமர்சனம்

தினமலர் வாரமலரில் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது. 32 வது அண்டான இவ்வருடம் 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற சிறுகதைக்கு முதல் பரிசாக Rs.20,000 என்று அறிவித்தனர். சரி கதை எப்படி என்று பார்ப்போம்னு படிச்சேன். 
 
ஒரு ஸ்கூல் டீச்சர் +2 படிக்கும் மாணவ மாணவியரை பொதுத்தேர்வு முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து விருந்து உபச்சாரம் செய்வதாக கதை. எதற்கு என்றால் பொது தெரிவில் அவர்கள் வெற்றி பெறாவிட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்காக என்று சொல்லி கதையை முடித்துள்ளார் கதையின் ஆசிரியர், திரு எம் ராமசாமி. நோக்கம் உயர்ந்தது தான். ஒரு ஆசிரியர் வெறும் பாடம் நடத்துவது மட்டுமே  தன் கடமை என்று இல்லாது தோல்வியுறும் மாணவர்களை தளர்வடைய விடாமல் மேலும் முனைப்போடு வெற்றிப்பாதையை நோக்கி நகர செய்வதும் தனது கடமையே என உணர்தல் மிக அவசியம். ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைவதும், அதில் பலர் தற்கொலைக்கு முயல்வதும் வேதனையான ஒரு விஷயம். 
 
இங்கு யாரும் தோல்வியை விரும்புவதில்லை. உண்மை தான். அனால், விதி ஒரு சிலருக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக பரிசளிப்பதில்லை. தகுந்த வழிகாட்டி ஒவ்வொருவருக்கும் அவசியம், அதிலும் குறிப்பாக தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு மிக அவசியம். சரியான கதைக்கு முதல் பரிசளித்த தினமலர் பொறுப்பாசிரியருக்கு நன்றி.

Sunday, August 26, 2018

பத்தில் மூன்று ரூபாய்

ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு குகைக்குள் நுழைவது போல அந்த ரயில் விசாகபட்டிணம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. புபனேஷ்வரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இன்னும் ஒரு நாள் பயணம் செய்து ராமேஷ்வரம் சென்று அடையும்.

"விசாகா பால்ல போட்ட டீ நன்றாக இருக்கும். வாங்கின்டு வரீங்களா?", அனன்யா கேட்டாள். ஆகாஷுக்கு  ரயில் டீ குடித்து நாக்கு செத்து விட்டது போல இருந்தது. ஒரு நல்ல டீ குடிக்க வேண்டும் என்று அவனுக்கும் ஆசை.

"ரயில் கண்டிப்பாக பத்து நிமிடம் நிற்குமல்லவா?" ஒரு முறைக்கு பத்து முறை டி.டி.ஆரிடம் கேட்டுக்கொண்டு இறங்கினான். சற்று நடந்து போனால் டீ கடை. கூட்டம் அலை மோதியது. ஒரு கண்ணால் ரயில் பெட்டியை பார்த்து கொண்டு ஓட்டமும் நடையுமாய் கடைக்கு சென்றான்.

"ரெண்டு டீ  குடுங்க...சீக்கிரம்" அவசரமாய் அவசரபடுத்தினான். ரயில் சென்று விடக்கூடாதே என்று அதில் ப்ரயாணம் செய்பவர்களுக்கு தானே கவலை? கடைக்காரருக்கு இல்லையே? அவர் மெதுவாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தார். வாங்கியவர்கள் பத்து ரூபாய் தாளை கொடுத்து விட்டு வேகமாய் ரயிலை நோக்கி ஓடினார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு ரயில் புரப்பட ஆயத்தமாகி இருந்தது.

ஆகாஷ் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இரண்டு டீயை வாங்கி "எவ்வளவு பா?" என்று கேட்டவாறு பர்சில் சில்லரையை தேடினான்.

"இருவது ரூபாய்" என்று பதில் வந்தது. அவசர அவசரமாய் இரண்டு பத்து ரூபாய் தாளை தேடி எடுத்து குடுத்து விட்டு வேகமாய் ரயில் நோக்கி நகரும்போது அந்த விலை பட்டியல் அவன் கண்ணில் பட்டது. அதில் ஒரு டீ ஏழு ரூபாய் என்று எழுதி இருந்தது.

"பதினாலு ரூபாய் தானே? எங்கே பாக்கி சில்லறை?" என்று கேட்க நினைப்பதற்குள் அந்த அறிவிப்பு வந்தது.

 "Your kind attention please. Train no. 18496, Bhubaneswar Rameswaram express is ready to leave from Platform no. 3."

பல்லாயிரக்கணக்கான பயணிகளை போல் அவனும் அந்த பத்தில் மூன்று ரூபாயை பற்றி சிந்திக்காமல் ரயிலை நோக்கி விரைந்தான்.

Sunday, July 22, 2018

முருகா உம்மாச்சி வந்துடமாட்டாளா?

"நமஸ்தே நரசிம்ஹாயா பாட்டு போடுப்பா, அப்போ தான் தூங்குவேன்" மழலை கொஞ்ஜலாய் மிரட்டியது.

"தூங்கர டைம் வந்தாச்சு. இப்போ அந்த பாட்ட கேட்டுட்டு நரசிம்ஹா உம்மாச்சி வந்துட்டா என்ன செய்யறது? பேசாம கர்னாடக சங்கீதம் கேட்டுட்டு தூங்கு", என்று சொல்லி சஞ்ஜெய் சுப்ரமணியத்தின் துன்பம் நேர்கையில் போட்டேன்.

மனம் ஒப்பவில்லை என்றாலும் பதில் பேசாமல் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தாள். அது முடிந்ததும் எப்போ வருவாரோ அடுத்த பட்டியலில் இருந்தது. தட்டினேன். அதுவும் முடிந்து போகவே, மதுரை சோமுவின் என்ன கவி பாடினாலும் கண்ணில் பட்டது. என்னை அறியாமல் கேட்க துவங்கினேன். முருகனை காணமுடியாத தவிப்பை ஒரு அற்புதமான பாடலாய் பாடியதை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். மழலை புரியாமல் பார்த்தாள்.

உடனே பூஜை அறைக்கு அழைத்துச் சென்று முருகனின் திருவுருவ  படத்தை காட்டினேன். "இது தான் முருகா உம்மாச்சி. எவ்வளவு அழகா இருக்கா பாத்தியா? இவர பத்தி தான் பாடறா" என்று விளக்கினேன்.

சற்று நேரம் என்னை உற்று நோக்கி, பின் கேட்டாள், "முருகா உம்மாச்சி வந்துடமாட்டாளா?"

பதில் பேசாமல் நமஸ்தே நரசிம்ஹாய பாட்டை போட்டேன்.

"க்நிஃபெ"

மனைவியிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசினேன். "உங்களுக்கு "க்நிஃபெ" னா என்னனு தெரியுமா?" எடுத்தவுடன் கே...