"சொல்லுப்பா, ஒரு ஊர்ல என்ன ஆச்சாம் ?".
என் மழலை இப்படி ஆரம்பித்தால் உடனே கதை சொல்லிவிட வேண்டும். இல்லையேல் அவ்வளவு தான். பிடுங்கி எடுத்து விடுவாள். சரி என்று ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன்.
சீதாவை ராவணன் கடல் தாண்டி கூட்டிண்டு போய்ட்டான். ராமா கடல் தாண்டி போவதற்காக எல்லா வானரங்களும் பாறைகளையும் பெரிய பெரிய கற்களையும் முதுகுல சுமந்தும் உருட்டிண்டு போயும் கடல்ல பாலம் கட்டித்து.
இத தூரத்துல இருந்த ஒரு அணில் கவனித்தது. உடனே ஓடி ஒரு வானரத்து பக்கம் வந்தது.
"சற்று தள்ளி போ. இந்நேரம் என் காலில் மிதிப்பட்டு செத்திருப்ப. என்ன வேண்டும் உனக்கு? ஏன் என் வழியில் குறுக்க வர?" என்று அந்த வானரம் கேட்டது.
"உனது வழியில் குறுக்கிட்டதற்காக என்னை மன்னிக்கனும். இங்கு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க தான் நான் வந்தேன்." அந்த அணில் அமைதியாக சொன்னது.
உனக்கு விஷயம் தெரியாதா? தாய் சீதையை ராவணன் கடல் தாண்டி கொண்டு போய்ட்டான். ராமன் அங்க போறதுக்காக பாலம் கட்டிண்டு இருக்கோம்.
" அப்படியா விஷயம். நானும் ராமனுக்காக உதவி செய்யறேன்", அப்படின்னு சொல்லிட்டு அந்த அணில் ஒரு சின்ன கல்ல தூக்க முடியாம தூக்கி கீழே போட்டது. இத பாத்ததும் பக்கத்துல இருந்த வானரங்கள் எல்லாம் கெக்க புக்கனு சிரிச்சுது.
கொஞ்ச தூரத்துலேந்து ராமர் இத கவனிச்சுண்டு இருந்தாரு. உடனே அந்த அணில கைல தூக்கி வெச்சுண்டு "எனக்காக உதவி செய்யனும்னு நினைச்சியே, அதுவே ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்லி அந்த அணிலோட முதுக அன்பா தடவி விட்டாரு. ராமா ஒம்மாச்சி அணிலோட முதுகுல தடவி விட்ட இடத்துல அப்படியே மூன்று கோடுகள் பதிஞ்சுடுத்து" என்று சொல்லி கதையை முடித்தேன்.
"அப்பா என்ன கதை சொன்னா இப்போ? எனக்கு சொல்லு பாப்போம்" என் மனைவி கேட்டாள்.
அதுவா? வந்து, அப்பா மயில் ராமருக்கு உதவின கதைய சொன்னார்.
இது என்னடா புது கதையா இருக்கு என்று யோசிப்பதற்குள் என் மனைவி கேட்டாள்," மயில் கதையா? என் காதுல அணில் கதைன்னு தான கேட்டது? "
" ஆமாம் அம்மா. அப்பாக்கு கதையே தெரியல. மயில் கதைய போய் அணில் கதைன்னு மாத்தி சொல்லிட்டா." என்று அவள் ஒரு கதையை சொல்லி முடித்தாள்.
No comments:
Post a Comment